பிரிமியர் தொடர் மீண்டும் நடக்குமா: பி.சி.சி.ஐ., புது திட்டம்

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால், எஞ்சிய பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ., தயாராகிறது.
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் நடக்கிறது. தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்- டில்லி இடையிலான போட்டி, போர் பதட்டம் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிரிமியர் தொடர் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்தது.
குவியும் 'கோடிகள்': தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பதால், பி.சி.சி.ஐ.,க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரிமியர் தொடரை பாதியில் ரத்து செய்தால், இழப்பு அதிகம். இத்தொடரின் ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ. 48,390 கோடி (2023-27) கிடைக்கிறது. ஒரு போட்டியை நடத்த தவறினால், ரூ. 100-125 கோடி இழப்பு ஏற்படும். ஒரு பிரிமியர் தொடர் மூலம் ரூ. 8,732 கோடி வருமானம் கிடைக்கும். ஒருவேளை எஞ்சிய 17 போட்டிகளை நடத்த முடியாமல் போனால், ரூ. 2000 கோடி இழப்பு ஏற்படும். தொடரை முழுமையாக நடத்தினால் தான் 'டைட்டில்' ஸ்பான்சர் டாடாவிடம் இருந்து ரூ. 500 கோடி, துணை ஸ்பான்சர்களிடம் இருந்து ரூ. 300 கோடி கிடைக்கும்.
10 வினாடிக்கு ரூ. 18 லட்சம்: பிரிமியர் தொடரின் ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள், விளம்பரங்கள் மூலம் லாபம் சம்பாதிக்கின்றனர். இரவு போட்டியின் போது ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு, 10 வினாடிக்கு ரூ. 18 லட்சம் வரை வசூலிக்கின்றனர். இப்படி பண மழை பொழிவதால், பிரிமியர் தொடரை எப்படியாவது நடத்த பி.சி.சி.ஐ., ஆர்வமாக உள்ளது. பஞ்சாப்-டில்லி போட்டி மீண்டும் புதிதாக நடத்தப்படும். இதுவரை 57 போட்டிகள் முழுமையாக முடிந்துள்ளன. இன்னும் 13 லீக் போட்டி, 4 'பிளே ஆப்' என 17 போட்டிகள் மீதமுள்ளன.
மூன்று மைதானம்: சென்னை (சேப்பாக்கம்), பெங்களூரு (சின்னசாமி), ஐதராபாத் (ராஜிவ்) என மூன்று மைதானங்களில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி கோல்கட்டா ஈடன் கார்டனில் பைனல் (மே 25) நடக்க வாய்ப்பு இல்லை. போட்டிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்ற விபரம் இன்று அறிவிக்கப்படலாம்.
இது பற்றி பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,''இப்போது தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள். பி.சி.சி.ஐ., நிர்வாகிகள், பிரிமியர் நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் இன்று விவாதிக்க உள்ளனர். எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, நல்ல முடிவு எடுக்கப்படும்,''என்றார்.
பிரிமியர் தொடர் நிறுத்தப்பட்டதால், 10 அணிகளில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். பெங்களூரு அணியின் டிம் டேவிட், ஹேசல்வுட் (ஆஸி.,), லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜேக்கப் பெத்தெல் நாடு திரும்பினர். லக்னோ, மும்பை, கோல்கட்டா அணியினரும் தங்களது சொந்த நாட்டுக்கு கிளம்பினர். இன்று போட்டி மீண்டும் துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியானால், இவர்கள் மீண்டும் இந்தியா வருவரா, போட்டிகளில் பங்கேற்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும்
-
கஞ்சா போதை ஆசாமி ஓட்டிய கார் மோதி ஆசிரியை மரணம்
-
2,000 ஏக்கர் வாழை சூறாவளியால் சேதம் 'இன்சூரன்ஸ்' இருந்தும் இழப்பீடு இல்லை
-
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 13 பவுன் தங்க கட்டி மாயம்
-
பத்மநாபசுவாமி கோவிலில் தங்கம் கொள்ளை
-
497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல்
-
ஆப்பரேஷன் சிந்துார் அதிரடியில் பலியான பயங்கரவாதிகள் யார்?