பள்ளி வாகனங்கள் சோதனை 34 பஸ்களுக்கு அனுமதி மறுப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட் சித்தேரிமேடு தனியார் பள்ளி வளாகத்தில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி வாகனங்களை, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலி, 365 பள்ளி வாகனங்களை சோதனை செய்தார்.
இதில், 331 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டன. மேலும், 34 வாகனங்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவர்கள், ஒரு வாரத்திற்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனைக்கு மீண்டும் உட்படுத்தி தகுதி சான்று பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தில், ஒட்டுநர்களுக்கு முதலுதவி மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. கண் சிகிச்சை முகாம் நடந்தது.
இந்த சோதனை நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.