விவசாயிகளுக்கு மஞ்சள் இயந்திரம் வாடகைக்கு விடுதல் குறித்த குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: 'சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் உள்ள மஞ்சள் இயந்திரத்தினை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என கலெக்டர் அறிவுறுத்தினார்.

வேளாண் விற்பனை துறை சார்பில் சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு மஞ்சள் வேக வைக்கும் இயந்திரம் மற்றும் மெருகூட்டும் இயந்திரம் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தினை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்குதல் குறித்தும் மற்றும் வாடகை நிர்ணயம் செய்தல் தொடர்பாகவும் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயந்திரத்தினை வாடகைக்கு விடுவது குறித்தும் மற்றும் இயந்திரத்திற்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

மாவட்டத்தைச் சுற்றியுள்ள மஞ்சள் விவசாயிகள் சின்னசேலம் கமிட்டியில் உள்ள மஞ்சள் இயந்திரத்தினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் வேளாண் வணிகத் துணை இயக்குநர் சுமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement