பல் மருத்துவ கிளினிக்கை விரிவுபடுத்த பணம் வாங்கி ஏமாற்றிய டாக்டர் கைது

வளசரவாக்கம், கூடுவாஞ்சேரி, ராமதாஸ் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30. இவரது மனைவி ஐஸ்வர்யா, 27. ஐஸ்வர்யாவின் தோழி வாயிலாக, வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஹரிஷ் வெங்கடேஷ்வரன், 41, மற்றும் நிர்வகித்து வரும் அவரது மனைவி வீணா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

கிளினிக்கை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும், டாக்டர் ஹரிஷ் வெங்கடேஷ்வரன் கூறியதை நம்பிய ஐஸ்வர்யாவும் அவரது கணவரும் சேர்ந்து, 41 லட்சம் ரூபாய் கடன் பெற்று கொடுத்துள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய் வீதம், 60 மாதங்கள் தருவதாக கூறிய நிலையில் 13 மாதங்கள் மட்டுமே பணத்தை கொடுத்துள்ளனர். அதன் பின், ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், டாக்டர் ஹரிஷ் வெங்கடேஸ்வரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர், ஒருவரிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement