சாலை விரிவாக்கத்தின் போது வெட்டப்படும் மரங்கள் ஏன் இந்த அலட்சியம்; புதியதாக மரக்கன்றுகள் நடாமல் அதிகாரிகள் அசட்டை

நாட்டின் வளர்ச்சிக்கு விரிவாக்கப்பணிகள் அவசியமானதால் ரோட்டோர மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இது போன்று வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடுவது அத்தியாவசியமாக இருந்தும் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
மாவட்டத்தை பொறுத்தவரையில் திண்டுக்கல் - திருச்சி, நத்தம், பழநி ரோடுகள், ஒட்டன்சத்திரம் - வடமதுரை ரோடுகள், நத்தம் - மதுரை ரோடு என ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பெரும்பாலான இடங்களில் விரிவாக்க பணிகள் முடிந்தும் முடியும் நிலையிலும் உள்ளது.ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் ஒரு மரக்கன்று கூட வைக்கப்படவில்லை. ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்களை நம்பி இருந்த பல உயிரினங்கள் பாதிக்கப்பட்டு இயற்கை சமநிலை பாழாகும் சூழல் உள்ளது. ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்று நட வேண்டும் என்ற விதி இருந்தும் அலட்சியப்போக்கு நிலவுகிறது.

மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழல் எல்லா கோடை காலங்களிலும் உள்ளது. இங்குள்ள மரங்களையும் வெட்டிவிட்டு தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதும், அதற்காக பல கோடியில் திட்டம் கொண்டு வந்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இனி வரும் காலங்களில் மரக்கன்றுகள் நட முயற்சிக்க வேண்டும்.

Advertisement