வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதனுக்கு நியூயார்க் பல்கலை டாக்டர் பட்டம்

சென்னை:வி.ஐ.டி., எனப்படும், வேலுார் தொழில்நுட்பப் பல்கலையின் நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விஸ்வநாதனுக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆர்.ஐ.டி., அதாவது, ரோசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம், நேற்று முன்தினம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நாடு முழுதும் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மேலாண்மை கல்வியை விரிவுபடுத்துவதில், விஸ்வநாதனின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் காட்டும் அர்ப்பணிப்புக்காக, ரோசெஸ்டர் தொழில்நுட்பப் பல்கலை தலைமை அதிகாரி டேவிட் முன்சன், கல்வி விவகாரங்களுக்கான பேராசிரியர் மற்றும் மூத்த துணைத் தலைவர் பிரபு டேவிட் ஆகியோர், வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதனுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தனர்.

இதற்காக விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார். இந்த விழாவில், வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், சர்வதேச உறவுகள் இயக்குநர் சீனிவாசன் பங்கேற்றனர்.

அமெரிக்க பல்கலைகளால் மூன்றாவது முறையாக, ஒரு இந்தியருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. 2009ல் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா பல்கலையும், 2024ல் அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலையும், விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இந்தாண்டில், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா செயின்ட் சேவியர்ஸ் பல்கலையால், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement