ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு பயின்ற மாணவர்களிடம்...மோசடி;பயிற்சி மையத்தில் 'ரெய்டு' நடத்தி ஆவணங்கள் பறிமுதல்

பொறியியல் படிப்பில் சேர, தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு தரமான பயிற்சி அளிப்பதாக ஏமாற்றி, சென்னையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த 'பிட்ஜேஇஇ' என்ற நுழைவு தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று சோதனை நடத்தினர். அங்கு, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பு காசோலை, ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

மத்திய அரசின் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை, ஜே.இ.இ., எனும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் என்ற நுழைவு தேர்வை, ஆண்டுதோறும் நடத்துகிறது.

இத்தேர்வு, ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில், நாட்டில் உள்ள தலை சிறந்த கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., மற்றும் பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பில் சேர முடியும்.

என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கு, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என, இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பர்.

இவர்களை தங்கள் பயிற்சி மையங்களில் சேர்க்க, நாடு முழுதும் நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அதில், 'பிட்ஜேஇஇ' என்ற நுழைவு தேர்வு பயிற்சி மையமும் ஒன்று.

இதன் தமிழக மண்டல தலைவராக அங்கூர் ஜெயின் என்பவர் செயல்பட்டு வருகிறார். பிற மாநிலங்களில், அந்த பயிற்சி மையத்திற்கு இயக்குநர்களும் உள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில், 'பிட்ஜேஇஇ' என்ற கல்வி பயிற்சி மையம், பொறியியல் படிப்பில் சேர நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கிறது. இவற்றில் பயிற்சி பெற, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பயிற்சி மையத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு, முறையாக பாடம் நடத்துவதில்லை. குறைவான பயிற்றுநர்களை வைத்து நடத்துவதால், அனைத்து பிரிவுகள் பற்றி விலாவரியாக பாடங்கள் நடத்துவதில்லை. இதுகுறித்து கேட்டால், அதன் நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிப்பதும் இல்லை.

இதனால் அங்கு பயின்றோர், 'தரமான பயிற்சி அளிக்காமல் ஏமாற்றி உள்ளனர். மேலும் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றதோடு, மையத்தையும் திடீரென மூடி மோசடி செய்துள்ளனர்' என குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்குமாறு, கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் காயத்ரி ஆகியோர் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தனிப்படை போலீசார், கீழ்ப்பாக்கம், கே.கே.நகரில் உள்ள, பிட்ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சி மையம் மற்றும் அதன் தலைமை நிர்வாகி அங்கூர் ஜெயினுக்கு சொந்தமான இரண்டு வீடுகளில், இரு தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். நேற்றும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இச்சோதனையில், 195 மாணவர்களின் அடையாள அட்டைகள், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், கட்டணத்தை திரும்ப தரக்கோரி மாணவர்களின் பெற்றோர் அனுப்பிய 125 கடிதங்கள் மற்றும் பண மோசடி தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

விசாரணையில், 'மாணவர்களுக்கு பயிற்சி முடிந்ததும் திருப்பி தரப்படும்' என வசூலித்த, 'டிபாசிட்' தொகையும் நுழைவு தேர்வு பயிற்சி மையம் மோசடி செய்தது விட்டதும் தெரியவந்துள்ளது.

இப்பயிற்சி மையத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால், சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



- நமது நிருபர் -

Advertisement