ஏழு குளங்களுக்கு சீசனில் வலசை வரும் பறவைகள் பலவிதம்! வாழ்விடங்களை பாதுகாப்பது அவசியம்

உடுமலை : ஏழு குளங்களுக்கு, ஆண்டுதோறும் இடம் பெயர்ந்து வரும், அரிய வகை பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை, வனத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலையிலிருந்து அடுக்குத்தொடராக தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் உட்பட ஏழு குளங்கள் அமைந்துள்ளன.
இந்த குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில், அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்பட்டு நிரப்பப்படுகிறது.
இதனால், ஆண்டுமுழுவதும் இக்குளங்களில், தண்ணீர் நிரம்பியிருக்கும். போடிபட்டியில், 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பெரியகுளத்தின் நீர்த்தேக்க பரப்பில், பல வகையான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
மரங்கள் மற்றும் தண்ணீர் நிறைந்த சூழல் காரணமாக, இக்குளத்திற்கு பல்வேறு வகையான அரிய வகை பறவைகள் வந்து செல்கின்றன. இதே போல், செங்குளம், ஒட்டுக்குளம், அம்மாபட்டி குளம் உள்ளிட்ட குளங்களும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளன.
ஏழு குள பகுதிக்கு வரும் பறவைகள் குறித்து, ஆண்டுதோறும் வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதில், உள்நாட்டில், குறிப்பிட்ட மாதங்கள் இடம் பெயரும் தன்மையுள்ள, கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வெண் கழுத்து நாரை, முக்குளிப்பான், தகைவிலான்குருவி, மீன்கொத்தி, ஆள்காட்டி, நீர்காகம், மடையான், செங்கால்நாரை, தாழைக்கோழி ஆகிய அரிய வகை பறவைகள், பெரியகுளத்தில், குறிப்பிட்ட நாட்கள் முகாமிடுகின்றன.
இவ்வாறு முகாமிடும் பறவைகள், இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும், கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இதனால், பெரியகுளம், சுற்றுச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது என, இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இடம் பெயரும் பறவைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவற்றின் வாழ்விடமான, பெரியகுளம் மற்றும் இதர குளங்களின் நீர்த்தேக்க பரப்பில், பல்வேறு இடையூறுகள் பறவைகளுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.
சரணாலயம் அமைக்கணும்
குறிப்பாக, தண்ணீர் அளவு குறையும் போது, கூடு கட்டும், மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், பிற பகுதிகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக இடம் பெயர்ந்து வரும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட காலத்தில், இனப்பெயர்ச்சி பாதிக்கப்பட்டால், பறவைகளின் வாழ்வியல் சுழற்சி கடுமையாக பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குளங்களின் கரைகளில், இரவு நேரங்களில், சமூக விரோதிகள், மது அருந்துவது உட்பட செயல்களாலும், பறவைகள் பாதிக்கப்படுகின்றன. குளத்தில் மண் அள்ளப்படுவதால், புதிய மரங்கள் வளர்வதும் தடையாகிறது.
இனப்பெருக்கத்திற்காக, நுாற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் இடம் பெயர்ந்து வரும் பறவைகளை பாதுகாக்க, பெரியகுளத்தில் பறவைகள் சரணாலாயம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'பெரியகுளம் மற்றும் செங்குளத்திற்கு, இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே குளங்களில் மரங்களை வெட்டுவதை தடை செய்ய வேண்டும். கரைகளில் மது அருந்துவது, தீ வைப்பது போன்ற சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த, பாதுகாவலர் நியமிக்க வேண்டும்,' என்றனர்.