கொலை, பலாத்கார வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்

புதுடில்லி:கொலை மற்றும் மகளையே பலாத்காரம் செய்த வழக்குகளில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், மஹராஷ்டிராவில் இருந்து குஜராத் சென்ற போது ரயிலில் கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலத்தில் 2008ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் முஹமது ஆலம்,43, என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், 2021ம் ஆண்டு தன் தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆலமின் மகள் டில்லி லட்சுமி நகர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முஹமது ஆலமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 28ல் இடைக்கால ஜாமினில் வந்த ஆலம் தலைமறைவானார்.

இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பரில் டில்லி நீதிமன்றம் ஆலம் குற்றவாளி என அறிவித்தது.

பீஹார் மற்றும் டில்லி போலீசார் ஆலமை தீவிரமாக தேடி வந்தனர். ரகசியத் தகவல் அடிப்படையில், கடந்த 6ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு, இடார்சியில் இருந்து சென்ற ஷராமிக் எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். நான்கு மணி நேர தேடுதலுக்குப் பின், ஆலம் கைது செய்யப்பட்டார். அதற்குள் வண்டி ஜல்கான் சந்திப்புக்கு வந்திருந்தது.

ஜாமினில் வந்த பின், ஆலம் தன் தோற்றம் மற்றும் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார். போலீசிடம் சிக்காமல் இருக்க பீஹார், டில்லி மற்றும் மகாராஷ்டிரா என மாநிலம், மாநிலமாக சுற்றிக் கொண்டிருந்தார். அதேபோல, பல முறை மொபைல் போன் எண்ணையும் மாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம் வல்சாத் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது அவர் போலீசிடம் சிக்கியுள்ளார்.

ஆலம் கைது செய்யப்பட்ட தகவல் பீஹார் போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆலம், டில்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement