பாதுகாப்பு வசதிகள் 100 சதவீதம் சரியாக இருந்தால்தான் தகுதிச்சான்று'

சேலம், சேலத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு, ஜவஹர் மில் திடலில் நேற்று நடந்தது. அப்பணிகளை பார்வை
யிட்ட பின், கலெக்டர்
பிருந்தாதேவி கூறியதாவது:
போக்குவரத்து, போலீசார், பள்ளி கல்வித்துறை சார்பில் கூட்டாய்வு செய்து, வாகனத்தை இயக்குவதற்கான தகுதிச்சான்று வழங்கினால் மட்டுமே, அதில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும். அதன்படி, 39 தனியார் பள்ளிகளின், 269 வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தியதில், 9 வாகனத்தில் சிறு குறைபாடு கண்டறிப்பட்டு, அதை சரிசெய்து மீண்டும்
சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டுள்ளது.
மாவட்டத்தில், 335 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும், 2,173 வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும். பாதுகாப்பு வசதிகள், 100 சதவீதம் சரியாக இருக்கும்
பட்சத்தில் மட்டும் தகுதிச்சான்று கிடைக்கும். மோசமான வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்படும். அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே, டிரைவர்கள் வாகனத்தை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் குறைபாடுகள்
கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ தடுப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

Advertisement