சமூக வலைதளங்களில் பொய் பரப்பிய 5,000 பதிவுகள் நீக்கம்

மும்பை: போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பிய தாக, சமூக வலைதளங்களில் உள்ள 5,000 பதிவுகளை மஹாராஷ்டிரா 'சைபர் கிரைம்' பிரிவு நீக்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த மாதம் 22ம் தேதி நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக, நம் ராணுவம் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ராணுவ நடவடிக்கை கள் பற்றி போலி தகவல்களை பரப்பக்கூடாது என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், மத்திய அரசின் அறிவுறுத்தல்களையும் மீறி, சமூக வலைதளங்களில் ராணுவ நடமாட்டம், திட்ட செயலாக்கம் பற்றி போலி தகவல்கள் பதிவு செய்துள்ளதை, மஹாராஷ்டிர சைபர் கிரைம் பிரிவு கண்டறிந்து நீக்கியது.

இதுகுறித்து மஹாராஷ்டிர சைபர் கிரைம் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் பற்றி சமூக வலைதளங்களில் 5,000 போலி தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, அப்பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற போலி தகவல்களை பதிவிட்ட நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். தேச பாதுகாப்பு விவகாரங்களில், சமூக வலைதள பயனர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement