நாகை மருத்துவ கல்லுாரி புதிய சாலை பணி 'விறுவிறு'

நாகப்பட்டினம்:நாகையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மந்தமாக நடந்த அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சாலை அமைக்கும் பணி, நம் நாளிதழ் செய்தி எதிரொலியால்விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நாகை அருகே ஒரத்துாரில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கடந்த ஆண்டு ஏப்., 24ல் திறக்கப்பட்டது.

நாகை -- வேளாங்கண்ணி சாலையிலிருந்து ஒரத்துார் பிரிவு சாலை, 3.02 கி.மீ. துாரம், 10 மீட்டர் அகலத்திற்கு, மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, விரிவாக்கம் செய்ய, 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு பணிகளை துவக்கி வைத்தார். 3 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும், மிக மந்தமாக பணி நடந்தது. இது குறித்து, மே 4ம் தேதி நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணி நடந்து வருகிறது. இரவு - பகல் இடைவிடாது லாரிகளில் மண், ஜல்லிக்கற்கள் எடுத்து வரப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஓராண்டாக மிகவும் மந்தமாக நடந்த சாலை அமைக்கும் பணி, தற்போது விறுவிறுப்படைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Advertisement