திருச்செந்துார் கடலில் குளித்த 4 பக்தர்களுக்கு கால் முறிவு

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்களில் நால்வருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோடை விடுமுறை என்பதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிலுக்கு வருவோர் கடற்கரையில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடல் அலையின் சீற்றம் நேற்று அதிகளவில் இருந்ததால், புனித நீராடிய பக்தர்கள் அச்சமடைந்தனர். இதனால், கடலோரம் இருந்த பாறைகளில் அடிபட்டு, சென்னையை சேர்ந்த சுப்புலட்சுமி, 60, கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணம்மா, 56, ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பிற்பகலில் அலையின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், கோவையை சேர்ந்த அருண்குமார், 44, கண்ணத்துாரை சேர்ந்த குப்புசாமி, 53, ஆகியோருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மரைன் போலீசார் பாதுகாப்பாக மீட்டு திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் கவனமாக நீராடுமாறு, ஒலிபெருக்கி வாயிலாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் எச்சரித்தனர்.

Advertisement