சாலையை ஆக்கிரமித்து பேனர்: போலீசார் வழக்கு பதிவு

பாகூர்: போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி - கடலுார் சாலையை, ஆக்கிரமித்து விளம்பர பலகைகள், பேனர்கள் அமைக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மாலை கவர்னர் கைலாஷ்நாதன், மணப்பட்டு மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரைக்கு ஆய்வு பணிக்காக சென்றார்.

அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலையில், பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூராக சாலையை ஆக்கிரமித்து விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர், இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், கிருமாம் பாக்கம் போலீசார், சாலையில் ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூராக விளம்பர போர்டு வைத்ததாக, நான்கு கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement