கட்டுமான தொழிலாளர் நலவாரிய ஆய்வுக் கூட்டம்
புதுச்சேரி:புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியங்களின் ஆய்வுக் கூட்டம், கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்தது.
கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், கவர்னரின் செயலர் மணிகண்டன், தொழிலாளர் நலத்துறை செயலர் ஒய்.எல்.என்.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் நல வாரியத்தின் நிர்வாக செயல்பாடுகள், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக விளக்கப்பட்டது.
கூட்டத்தில், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதை புதுப்பிக்க நிர்ப்பந்திக்க வேண்டாம். அதில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வேண்டும். தொடர் முகாம்கள் நடத்தி புதிய தொழிலாளர்களை அடையாளம் கண்டு உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தொழிலாளர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவாக நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் தேவைகள் அல்லது குறைபாடுகள் முறையாக அணுகப்படுதல் வேண்டும்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாக வசூல் செய்ய வேண்டும்.
புதுச்சேரி நகர திட்ட குழுமம் மூலமாக அரசுக்கு செலுத்தப்படும் வருவாயை முறையாக வசூல் செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு கவர்னர் அறிவுறுத்தினார்.