எதிர்கோட்டை காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதம்

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டை வழியாகச் செல்லும் காயல்குடி ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் தேங்குவதற்கு வழி இன்றி குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், மாதாங்கோவில் பட்டி, புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது.

இந்த காயல்குடி ஆற்றினை நம்பி எதிர்கோட்டையில் 400 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இதற்காக எதிர்கோட்டையில் 1994 ல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் இப்பகுதியில் விவசாயம் செழித்ததோடு குடிநீர் ஆதாரமும் கிடைத்து வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்து விட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தும் அதனை தேக்க முடியாமல் வெளியேறி விடுகின்றது.

தற்போது விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோடை மழைக்கு தண்ணீர் வந்தும் தேக்க வழியில்லாமல் வெளியேறிவிட்டது. எனவே உடனடியாக சேதம் அடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement