திருக்கோஷ்டியூரில் தேரோட்டம்

திருப்புத்துார், : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரையில் 12 நாட்கள் ஆதி பிரம்மோத்ஸவம் நடைபெறும். மே 1ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

தொடர்ந்து தினசரி காலை சுவாமி பல்லக்கிலும், இரவு வாகனங்களிலும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று பெருமாள் பிறந்த சித்ரா நட்சத்திரத்தை முன்னிட்டு திருத்தேரில் காலையில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மாலை 4:50 மணிக்கு மயில்ராயன் கோட்டை நாட்டார்கள், பட்டமங்கலநாட்டார்கள் தேர் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. பெண்கள் கோலமிட்டு வரவேற்றனர். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

நாளை இரவில் புஷ்ப யாகம் வாசித்தலும், மே12 இரவில் புஷ்ப பல்லக்கும் நடைபெறும். தொடர்ந்து பிரமோத்ஸவம் நிறைவடையும்.

Advertisement