மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு காஞ்சிபுரத்திற்கு படையெடுத்த 'குடி'மகன்கள்

வாலாஜாபாத்:வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில், மாமல்லபுரத்தில் நேற்று சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டுற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதான சாலைகளையொட்டி உள்ள குறிப்பிட்ட சில கடைகள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 9ம் தேதி அக்கடைகளுக்கு மட்டும் சுற்றறிக்கை தரப்பட்டது.

இதனிடையே, திடீரென, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10க்கும் குறைவான கடைகள் இயக்கவும், மற்ற கடைகள் மூடவும், மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் ஐந்து கடைகள் மட்டுமே இயக்க நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு, கதிர்ப்பூர், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாவூர், நத்தப்பேட்டை உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் ஆகிய ஐந்து கடைகள் மட்டும் நேற்று வழக்கமான நேரத்திற்கு திறக்கப்பட்டன.

மது பிரியர்களின் படையெடுப்பால், அக்கடைகளில் தள்ளு முள்ளு, வாக்குவாதம் போன்ற பிரச்னைகள் எழுந்ததையடுத்து, விற்பனையாளர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த காவல்துறைக்கு தகவல் அளித்து உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை முறைப்படுத்த போலீசார் முயற்சி செய்தும், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் கடை திறந்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது.

Advertisement