அப்பநாயக்கன்பட்டியில் 25 நாளாக குடிநீர் சப்ளை இல்லை
சூலுார்; 25 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். புதுப்புது குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன. பல பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு, குடிநீர் சப்ளை முறையாக செய்யப்படாத காரணத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டனர். குடிநீர் சப்ளை சீராக்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. பல நாட்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து மக்கள் கூறியதாவது: 10 நாள், 15 நாள் என இருந்த குடிநீர் சப்ளை தற்போது, 25 நாளுக்கு ஒரு முறை என, மாறிவிட்டது. தண்ணீர் தொட்டியில் இருந்தும் சப்ளை செய்வதில்லை.
நல்ல தண்ணீர், சப்பை தண்ணீர் வந்து, 25 நாட்களாகி விட்டது. எப்படி ஊரில் குடியிருப்பது. ஊராட்சி நிர்வாகத்துக்கும், டேங்க் ஆபரேட்டர்களுக்கும் இடையில் உள்ள பிரச்னையால் தான் குடிநீர் சப்ளை செய்யாமல் இருப்பதாகவும் புகார் உள்ளது. பி.டி.ஓ., இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், கலெக்டரிடம் முறையிடுவோம். மக்களை திரட்டி சாலை மறியல் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.