தொகுப்பூதியம் உயர்த்த கோரி ஆஷா பணியாளர்கள் போராட்டம்

சென்னை : தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி, ஆஷா பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 2,650 ஆஷா பணியாளர்கள் மலைப்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள், மலைப்பகுதிகளில் கர்ப்பிணியரை கண்காணித்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

அத்துடன், மாநில அரசின் திட்டங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மத்திய, மாநில நிதி திட்டத்தில், இவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அண்டை மாநிலங்களை போல, எங்களுக்கும் தொகுப்பூதியத்தை உயர்த்த வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சங்கத்தின் செயலர் வஹிதா நிஜாம் கூறியதாவது:

தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், ஆஷா பணியாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம், 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அம்மாநிலங்களை விட, தமிழகத்தில் ஆஷா பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு.

இங்கு, 5,550 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களை போல, தமிழக ஆஷா பணியாளர்களுக்கும் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement