முதுமக்கள் தாழி, இரும்பு கத்திகள் காளையார்கோவிலில் கண்டெடுப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடைஉடைப்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள், இரும்பு கத்தியை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் தி.பாலசுப்பிரமணியன், இலந்தக்கரை ரமேஷ் ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது:
காளையார்கோவில் அருகே புரசடைஉடைப்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள் மற்றும் கல்வட்டம், அரை அடி நீளமுள்ள இரும்புக்கத்தியை கண்டறிந்தோம். முதுமக்கள் தாழிகள் அருகே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன. சமீபத்தில் பெய்த மழைக்கு மண்ணில் இருந்து வெளியேறியுள்ளது.
பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை பானைக்குள் வைத்து அடக்கம் செய்துள்ளனர். இதை ஈமத்தாழிகள் என்றும் அழைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் பானையில் போட்டு மூடி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
முதுமக்கள் தாழியை சுற்றி 50 மீட்டர் தொலைவில் கல்வட்டம் காணப்பட்டது. இவை முற்றிலும் செம்பூரான் கற்களால் உருவாக்கப்பட்டது. ஈமச்சடங்கு நடந்த இடங்களை குறிக்க, பெரி செம்பூரான் கற்களை நட்டு வைத்துள்ளனர். தமிழர்களின் கலாசாரம் நாகரிகத்தின் அடையாளமாக காணப்படுகிறது.
இதை பெருங்கற்கால காலம் என குறிப்பிடுகின்றனர். அக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் நீரோட்டம் உள்ள பகுதியை தேர்வு செய்தே வாழ்ந்துள்ளனர் என தெரிகிறது. இந்த பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.