ப.பாளையத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சில நாட்களாக உலா வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் வீட்டை நோட்டமிட்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, கோயிலாங்காடு பகுதியில் உள்ள மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், பணத்தை திருடி சென்றார். விசாரணையில், ராஜா என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், வசந்தநகர், காவிரி உள்ளிட்ட பகுதியில், இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வாறு வருபவர்கள், வீட்டை நோட்டமிட்டு செல்கின்றனர். இரவில், மூன்று, நான்கு பேர் கும்பலாக டூவீலரில் வலம் வருகின்றனர். மேலும், இரவு, பகலாக இப்பகுதியில் மது விற்பனை நடந்து வருகிறது. மர்ம நபர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இரவில் போலீசார் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.