பத்தாம் வகுப்பு தேர்வு நம் மாவட்டம் எந்த இடம்?

திருப்பூர்; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் எந்த இடத்தைப் பிடிக்கும்என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 29 ஆயிரத்து, 899 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.
தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 21ம் தேதி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் துவங்கியது.
பத்து நாட்கள் நடந்த பணி, ஏப்., 30ம் தேதி நிறைவு பெற்றது. ஏப்ரல், 31 முதல் தேர்வுத்துறைக்கு மதிப்பெண் விபரங்களை பதிவேற்றும் பணி நடந்தது; கடந்த வார துவக்கத்தில் இப்பணிகளும் முடிடைந்துள்ளன.
விடைத்தாள் திருத்தும், 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஏற்கனவே அமைச்சர் அறிவித்தபடி வரும், 19ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2023 பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவில், மாநிலத்தில், 11வது இடம் பெற்ற திருப்பூர் கல்வி மாவட்டம், 2024ல், பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடத்துக்கு சென்றது. மாவட்ட கல்வித்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த, 9ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூர் முதலிடம் எதிர்பார்த்த நிலையில், மூன்றாமிடம் பெற்றது; மாவட்ட கல்வித்துறை ஏமாற்றம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் எந்த இடம் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
