சின்னச்சுருளி அருவியில் பயணிகளுக்கு நீடிக்கும் தடை
ஆண்டிபட்டி, மே 12 -
மேகமலை சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிப்பதால் கோடையில் அருவியில் குளிக்க ஆர்வத்துடன் வருபவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தொடர்கிறது.
கோம்பைத்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச் சுருளி அருவி. இந்த அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து குளித்துச் சென்றனர். விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் வந்து செல்வர். கடந்த சில நாட்களுக்கு முன் அருவி அருகே குளித்த 10 வயது சிறுவன், நீரில் மூழ்கி இறந்தார். அப்பகுதியில் கண்காணிப்பு பணியாளர்கள், அடிப்படை வசதிகள் இல்லாததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் சென்று வர வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். ஓரிரு நாட்களில் மீண்டும் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவி பகுதியில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான பணிகள் முடியும் வரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. விபரம் அறியாத சுற்றுலாப் பயணிகள் பலரும் வாகனங்களில் சின்னச் சுருளி அருவிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.