வாகன போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் அதிகரிப்பு: பலியை குறைக்க நடவடிக்கைகளில் கவனம் தேவை

1

ரெட்டியார்சத்திரம்: வாகன போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில் உள்ள அலட்சியத்தால், விபத்துகள், உயிர் பலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. போலீசாரின் கெடுபிடி நடவடிக்கைகளுடன், பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்ற தேசிய,மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு வாரத்தை அரசு கடைபிடித்து வருகிறது. பெரும்பாலோர் இதை கண்டு கொள்வதில்லை.

சரக்கு வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எடை உயரத்தை விட கூடுதலான அளவில் பொருட்களை எடுத்துச் செல்வது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாத பயணம், போதிய பயிற்சி, டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச்செல்வது போன்ற பிரச்னைகள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. அவ்வப்போது வழக்கு பதிவு, அபராத வசூல் செய்த போதும் இது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

உரிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததது, ரோட்டோர குழிகள், வேகத்தடைகள், தடுப்புகள், துண்டிக்கப்பட்ட ரோடு போன்றவையும் விபத்திற்கு காரணமாகின்றன. இதில் பெரும்பாலான சம்பவங்களுக்கு வாகன ஓட்டிகளின் விதிமீறல் அலட்சிய பயணமே முக்கிய பங்கு வகிக்கிறது. விலைமதிப்பற்ற உயிர், உடல் பாகங்களை பாதுகாப்பதில் உள்ள அலட்சியம் பல துயரங்களை அடுத்தடுத்து நிகழ்த்துகிறது. விபத்துக்கள் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பதில் போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது.

Advertisement