துாத்துக்குடியை சேர்ந்தவர் மிஸ் திருநங்கையாக தேர்வு

விழுப்புரம் : தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், கூவாகம் திருவிழா - 2025 நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துடன், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைத்த 22 திருநங்கைகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து இரவு 9:50 மணிக்கு மேல் மூன்று சுற்றுகளாக மிஸ் திருநங்கை போட்டி நடந்தது. சிறந்த திருநங்கைகளை நடன இயக்குனர் ஜெப்ரி வார்டன் தலைமையிலான குழு தேர்வு செய்தனர்.

முதலிடமான மிஸ் திருநங்கை - 2025 பட்டத்தை துாத்துக்குடியைச் சேர்ந்த சக்தி வென்றார். இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த ஜோதாவும், மூன்றாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த விபாஷாவும் பிடித்தனர். முதலிடம் பிடித்து மிஸ் திருநங்கை பட்டம் வென்ற துாத்துக்குடி சக்திக்கு கிரீடத்தோடு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூட்டமைப்பு தலைவர் ஜீவா தலைமையில் நிர்வாகிகள் நுாரி, நீலா, பானு, ஜோதிகா, சுதா செய்தனர்.

Advertisement