போபண்ணா ஜோடி வெற்றி

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
இத்தாலியில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீரர் போபண்ணா, செக் குடியரசின் ஆடம் பவ்லாசெக் ஜோடி, குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 4-6 என கோட்டை விட்டது. இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை போபண்ணா ஜோடி 7-6 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி 10-4 என எளிதாக வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 44 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 10-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் ஜோடி 1-6, 2-6 என ஸ்பெயினின் மார்சல் கிரானர்லஸ், அர்ஜென்டினாவின் ஹொராசியோ ஜெபெல்லோஸ் ஜோடியிடம் தோல்விடையந்தது.