மகனை கொன்று உடலை துண்டுகளாக்கி சூட்கேஸில் அடைத்து வீசிய தாய் கைது

5

குவஹாத்தி :வடகிழக்கு மாநிலமான அசாமில், 10 வயது மகனைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்து வனப்பகுதியில் வீசிவிட்டு தப்பியோடிய தாயை, காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபாலி ராஜ்போங்ஷி. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த தன்,10 வயது மகன் மிருன்மோய் பர்மனை காணவில்லை என, நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். டியூஷனுக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என, அவர் புகாரில் தெரிவித்திருந்தார். போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில், குவஹாத்தியில் உள்ள பாசிஷ்டா கோவிலுக்கு அருகே புதரில் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது, மாயமானதாக சொல்லப்பட்ட சிறுவன் மிருன்மோய் கொல்லப்பட்டு உடலை துண்டுகளாக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அருகில் கிடந்த சிறுவனின் புத்தக பையையும் போலீசார் மீட்டனர்.

இதையடுத்து, சிறுவனின் தாய் தீபாலியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, காதலனுடன் சேர்ந்து மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கணவர் பிகாஷ் பர்மானிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் தீபாலி.

அவருக்கும், கணக்காளர் ஜெனரல் அலுவலகத்தில் தற்காலிக பியூனாக பணியாற்றி வந்த ஜோதிமோய் ஹலோ என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இந்த உறவுக்கு, மகன் தடையாக இருந்ததாக கருதி, அவனை கொன்றதாக தீபாலி, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தீபாலியை கைது செய்த போலீசார், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement