ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைவு

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்தது.


சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,045 ரூபாய்க்கும், சவரன் 72,360 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 8,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



சவரனுக்கு 1,320 ரூபாய் சரிவடைந்து, 71,040 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 109 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



திடீரென மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, 8,750 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,040 ரூபாய் சரிவடைந்து, 70,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 295 ரூபாயும், சவரனுக்கு 2,360 ரூபாயும் சரிவடைந்துள்ளது. நேற்று மாலையில், வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 110 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement