அதிகளவில் தானியங்கள் இருப்பு; ரேஷனை கூடுதலாக்க திட்டம்

புதுடில்லி : பொது வினியோகத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் வழங்குவது குறித்து, இந்திய உணவுக் கழகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:




புதிய வரத்துகளுக்கு முன்னதாக, ஏற்கனவே கிடங்குகளில் உள்ள தானியங்களை காலி செய்வது வழக்கமான நடைமுறையாகும். தற்போது உணவு தானிய இருப்பு கிடங்குகளில் உள்ள அரிசி மற்றும் கோதுமை இருப்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி நிலவரப்படி, ஓராண்டு பொது வினியோகத்திற்கான அளவை விட கூடுதலாக உள்ளன.

எனவே, பயனாளிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை, ஒரே நேரத்தில் வழங்குவது குறித்து, அனைத்து மட்டங்களிலும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

விரைவில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும். ஏற்கனவே, கொரோனா தொற்று காலத்தின் போது, அரசு இரண்டு மாதங்களுக்கான பொருட்களை ஒரே நேரத்தில் வினியோகித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement