பறக்க விடப்பட்ட வெள்ளைக்கொடி; வரியை குறைத்த அமெரிக்கா, சீனா

புதுடில்லி : அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு இறக்குமதியை அதிகரித்து வந்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டுஇருக்கிறது.

இறக்குமதி பொருட்களின் மீதான வரிகளை, 90 நாட்களுக்கு பரஸ்பரம் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர், உலகளாவிய நிதி சந்தைகளை உலுக்கியது. வினியோக தொடர்களை சீர்குலைத்ததுடன், மந்தநிலை அச்சங்களையும் ஏற்படுத்தியது.

குறைப்பு



இதனிடையே, உலகின் இரு பெரும் பொருளாதாரங்களின் பிரதிநிதிகளிடையே, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்த பேச்சுக்கு பின், வரிகளை குறைப்பதற்கு ஒப்புக் கொண்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்கா, சீனப் பொருட்களுக்கான ஒட்டுமொத்த வரியை தற்காலிகமாக 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கும்.

அதேபோன்று சீனா, அமெரிக்க இறக்குமதிகளுக்கு, அதன் வரி விதிப்பை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்



இந்த பரஸ்பர கட்டண திருத்தங்கள் நாளை அதாவது 14ம் தேதிக்குள் அமலுக்கு வரும். இருப்பினும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டிரம்ப் விதித்த 20 சதவீத பரஸ்பர விதி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், சீனாவும் தங்கள் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன.

நிலையான மற்றும் நீண்டகால மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையின் அவசியத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள இந்த முடிவு, உலகளாவிய முதலீட்டாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

 சீனப் பொருட்களுக்கு வரி 145%லிருந்து 30%

 அமெரிக்கப் பொருட்களுக்கு வரி 125%லிருந்து 10%

Advertisement