உ.பி.,யில் பெண் குழந்தைகளுக்கு 'சிந்துார்' பெயர் சூட்டிய பெற்றோர்
குஷிநகர் : உத்தர பிரதேசத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட பெற்றோர், புதிதாக பிறந்த தங்களின் பெண் குழந்தைகளுக்கு, 'சிந்துார்' என பெயர் சூட்டி உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்களை நம் ராணுவத்தினர் அழித்தனர்.
இந்த நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' என பெயரிடப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 26 பேரும் ஆண்களே. இதில் பெரும்பாலானோர், தங்களது மனைவியரின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திருமணமான ஹிந்து பெண்கள், நெற்றி வகிடில் குங்குமமிடுவது, 'சிந்துார்' எனப்படுகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கைக்கு, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்தார்.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யின் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த 10 - 11 ஆகிய தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர், சிந்துார் என பெயர் சூட்டி உள்ளனர்.
பெற்றோர் கூறுகையில், 'தற்போது, சிந்துார் என்பது வார்த்தை அல்ல; அது ஒரு உணர்ச்சி. எனவே, மகளுக்கு சிந்துார் என பெயர் வைத்துள்ளோம். இந்த பெயர், உத்வேகத்தையும், தேசப்பற்றையும் பறைசாற்றுகிறது. என் மகள் வளர்ந்து, விபரம் அறியும்போது, இந்த பெயர் வைத்ததற்கு மிகவும் பெருமைப்படுவாள்' என்றனர்.
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி