பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகள் விபரம் வெளியீடு
புதுடில்லி : பாகிஸ்தானில் நம் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகளின் படங்கள் மற்றும் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாக்.,கில் ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து, நம் படையினர் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தனர்.
அதிர்ச்சி
அதில், முரிட்கேயில் செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், பஹவல்பூரில் செயல்பட்ட ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், சியால்கோட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத பயிற்சி முகாம் ஆகியவை முக்கியமானவை.
இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர், புல்வாமா தாக்குதல் உட்பட நம் நாட்டில் நடந்த பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்பட்டவர்கள்.
முரிட்கேயில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு, மே 8ல் நடந்தது.
அதில், பாக்., ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதை படத்துடன் நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.
தற்போது, அந்த அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் முழு விபரங்களை மத்திய அரசு வெளியிட்டதோடு, இறுதிச் சடங்கை நடத்தியவரே, அமெரிக்காவால் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதி என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, முழு அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அப்போது, இறுதிச் சடங்கில் மத ரீதியான நடைமுறைகளை தலைமையேற்று நடத்தியது, ஹபீஸ் அப்துர் ரவூப் என்ற லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், அப்துர் ரவூப், அமெரிக்காவால் 'சர்வதேச பயங்கரவாதி' என அறிவிக்கப்பட்டு, தேடப்படுபவர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
பாலா - இ - இன்சானியத் என தனியாக ஒரு பயங்கரவாத அமைப்பை துவங்கி தலைவராக இருக்கிறார் என்பதையும், அந்த அமைப்பும் அமெரிக்கா, ஐ.நா., ஆகியவற்றால் தடை செய்யப்பட்டுஇருப்பதையும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
புகைப்படம்
இதுபோல, பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு படத்தை வெளியிட்டு, அதில், பாக்., ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பயாஸ் உசைன் ஷா, மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ், பிரிகேடியர் முகமது புர்கான் ஷபீர் ஆகியோர் இருப்பதைவும் சுட்டிக்காட்டி உள்ளது.
இவர்களை தவிர, பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி உஸ்மான் அன்வர், மாலிக் சோகைப் அகமது என்ற அரசியல் தலைவர் ஆகியோரும் பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு படத்தில் இருப்பதையும் நம் ராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுஉள்ளனர்.
முரிட்கேயில் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளை தலைமையேற்று நடத்திய, அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அப்துர் ரவூப்பை, 'அப்பாவி குடும்பஸ்தர்; மதகுரு' என பாகிஸ்தான் கூறுகிறது. இதுகுறித்து, பாக்., ராணுவ செய்தித் தொடர்பு துறை இயக்குநர் ஜெனரல் அகமது ஷெரிப் கூறுகையில், ''அப்துர் ரவூபின் தனிப்பட்ட தேசிய அடையாள அட்டையின்படி, 'பாகிஸ்தான் மார்கஸி முஸ்லிம் லீக்' என்ற அமைப்பின் சமூக சேவைகள் பிரிவின் பொறுப்பாளர்,'' என்றார். அப்துர் ரவூபின் தேசிய அடையாள எண்ணையும் அவர் வெளியிட்டார். ஆனால், அந்த எண் அடிப்படையில் பார்த்தால், ஹபீஸ் அப்துர் ரவூப்பின் பெயர், பிறந்த தேதி ஆகியவை, அமெரிக்காவின் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதி பட்டியலில் உள்ள விபரங்களுடன் மிகச் சரியாக பொருந்துகின்றன.
மேலும்
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
" நீங்கள் எங்க ஹீரோ அங்கிள் " - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு