காப்பியடிக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? நேர்மையான மாணவர்களின் வாய்ப்பு தட்டிப்பறிப்பு

2


பொதுத்தேர்வுகளில் காப்பியடித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், உயர்கல்வியில் தாக்குப்பிடிக்க முடியாமல் கல்லுாரியில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதுடன், தகுதியான மாணவர்களின் வாய்ப்பையும் தட்டி பறித்து வருகின்றனர். எனவே, அதிகரித்து வரும் காப்பியடிக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சில தேர்வு மையங்களில் காப்பி அடிக்க கல்வித்துறை அதிகாரிகள் உதவுவதாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்த போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதை கல்வியாளர்கள் சிலர் சுட்டிக்காட்டி அரசை எச்சரித்தனர். ஆனாலும், காப்பியடிப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

சமூக பிரச்னை



இந்நிலையில், கடந்த வாரம் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், சில தேர்வு மையங்களில் மட்டும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கடினமான பாடங்களிலும், 100க்கு 100 மதிப்பெண் எடுத்திருப்பது காப்பியடிக்கும் கலாசாரத்தை உறுதி செய்துள்ளது.


இதன் எதிரொலியாக, தேர்ச்சி விகிதம் அதிகரித்ததுடன், அதிக சென்டம் எடுத்துள்ளோம் என, பல பள்ளிகள் பெருமைப்பட்டாலும், இது உண்மையான வளர்ச்சியல்ல. இது திடீரென ஏற்பட்டுள்ள வீக்கத்தை போன்றது. காப்பியடித்து அதிக மதிப்பெண் எடுத்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களால், இரண்டு சமூக பிரச்னைகள் எழுந்துள்ளன.


முதலாவதாக, மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போல, தமிழகத்தில் இன்ஜினியரிங், வேளாண்மை, கலை அறிவியல் போன்ற படிப்புகளுக்கு தகுதி தேர்வுகள் இல்லை. மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடக்கிறது. காப்பியடித்து அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வியில் எளிதாக இடம் கிடைத்து விடும்.


இதுபோன்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டிலேயே கடினமான பாடங்களை எதிர்கொள்ள முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். பலர் தாக்குப்பிடித்து கல்லுாரியில் நீடித்தாலும், தேர்ச்சி பெறாமலேயே அரியர்ஸ் வரிசைக்கட்டி நிற்க, கல்லுாரியில் இருந்து வெளியேறுகின்றனர்.

சாதனை



இரண்டாவது சமூக பிரச்னை, நன்றாக படித்த மாணவர்களுக்கு, நியாயமாக கிடைக்க வேண்டிய இடத்தை, 'காப்பி மாணவர்கள்' தட்டி பறித்து விடுகின்றனர். இதனால், இரவு பகலாக கஷ்டப்பட்டு படித்த திறமையான மாணவர்கள், உயர் கல்வியில் தங்களுக்கான இடத்தை இழக்கின்றனர்; அத்துடன் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.


தேர்ச்சி சதவீதத்திற்காக மாணவர்களை குறுக்கு வழியில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பது சாதனை கிடையாது. அவர்களை நல்ல மாணவர்களாகவும், நேர்மையான குடிமக்களாகவும் உருவாக்குவதே சாதனையாகும். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும், காப்பிஅடிக்கும் கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இதில், அரசு கவனம் செலுத்தாவிட்டால், எதிர்காலத்தில் காப்பியடிக்கும் கலாசாரம் கல்வித்துறையை கரையான் போல் அரித்து விடும் என, கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement