அ.தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமா? பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய சீமான்


சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீமானின் நா.த.க.,வை கூட்டணியில் சேர்க்க பேச்சு நடந்து வருகிறது. தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அ.தி.மு.க., அணியில் சீமான் சேர வேண்டும் என, அவருக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

வேண்டுகோள்



இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சீமான் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:

நா.த.க., முன்வைத்த கோரிக்கையை ஏற்று, முருகனின் வழிபாட்டு திருவிழாவான தைப்பூசத்திற்கு பொது விடுமுறையையும், காவிரி படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் பழனிசாமி அறிவித்தார்.


'நீட்' தேர்வு பாதிப்பில் இருந்து, கிராமப்புற ஏழை அரசு பள்ளி மாணவர்களை, ஓரளவாவது பாதுகாக்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லுாரி களை கொண்டு வந்தது என, அரும்பணிகள் பல ஆற்றியுள்ளார். இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், மகிழ்வுடன், நலமோடு மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை, பழனிசாமியை இப்படி புகழ்ந்து, சீமான் பேசாத நிலையில், இந்த வாழ்த்து செய்தி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


பழனிசாமியின் 71வது பிறந்த நாளையொட்டி அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துஉள்ளனர். பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வந்த சூழலில், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும், நேரில் சந்திப்பதையும் தவிர்க்குமாறு, அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துஇருந்தார்.


மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழுதும் நேற்று, அ.தி.மு.க.,வினர் மக்களுக்கு பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கினர். சென்னை தி.நகரைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சுனில், பழனிசாமி உத்தரவின் பேரில் 7 ஏழை விவசாயிகளுக்கு பசு - கன்று வழங்கினார். மேலும் கோவில்களில் சிறப்பு பூஜைகளை கட்சியினர் நடத்தினர்.

அண்ணாமலை வாழ்த்து



தமிழக கவர்னர் ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்ளிட்டோர், பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement