போரை நிறுத்த நானே காரணம் மீண்டும் அடித்து விடும் டிரம்ப்

1

வாஷிங்டன் : இந்தியா - -பாக்., இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு நானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று மீண்டும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அதிபரின் அலுவலக இல்லமான வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரிடம் இந்தியா - -பாக்., இடையிலான போர் நிறுத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த சூழலில், மே 10ல், என் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் உடனடி போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய உதவியது.

இரு நாடுகளின் தலைமைகளும் அசைக்க முடியாதவை; சக்தி வாய்ந்தவை. சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், மன உறுதியை அவர்கள் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே நிறைய உதவிகள் செய்திருக்கிறோம்; இன்னும் நிறைய வர்த்தகம் செய்யப்போகிறோம் என அவர்களிடம் தெரிவித்தேன்.

நீங்கள் போரை நிறுத்தாவிட்டால், உங்களுடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தேன். இதையடுத்து, போரை நிறுத்துவதாக திடீரென அவர்கள் தெரிவித்தனர்; அதன்படி, செய்து விட்டனர்.

போரை நிறுத்துவதற்கு வர்த்தகத்தை நான் பயன்படுத்தியது போல, உலகில் யாருமே இதுவரை செய்ததில்லை. இந்த போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்கும் என கருதுகிறேன்.

இரு நாடுகளும் நிறைய அணு ஆயுதங்களை வைத்துள்ளன. நாங்கள், ஒரு அணு ஆயுத மோதலை நிறுத்தி இருக்கிறோம். மோதல் தொடர்ந்தால், மோசமான அணு ஆயுதப் போராக மாறி இருக்கும்; லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

எனவே, இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தத்துக்கான பணிகளை மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு நன்றி.

இனிமேல், இரு நாடுகளுடனும் அமெரிக்கா நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறது. தற்போது, இந்தியாவுடன் வர்த்தக பேச்சு நடத்தி வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடனும் பேச்சு துவங்கப் போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement