ஒப்படைவு நிலத்தை திரும்பப் பெறும் அரசின் உத்தரவு ரத்து: கோர்ட் உத்தரவு

மதுரை : மதுரையில் நிபந்தனைகளை மீறியதாக சி.எஸ்.ஐ., நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட நில ஒப்படைவை ரத்து செய்து திரும்பப் பெறும் தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

மதுரை தல்லாகுளத்தில் 31.1 ஏக்கர் நிலத்தை 'தி அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர் பார் பாரின் மிஷனரிக்கு (ஏ.பி.சி.எப்.எம்.,) பெண்கள் மற்றும் ஆதரவற்றோருக்கான இல்லம் அமைக்க நிபந்தனைகளுடன் வருவாய்த்துறை 1912ல் வழங்கியது.

ஏ.பி.சி.எப்.எம்., 'சர்ச் ஆப் சவுத் இந்தியன் டிரஸ்ட் அசோசியேஷனுடன் (சி.எஸ்.ஐ.டி.ஏ.,) இணைக்கப்பட்டது. 'யுனைடெட் சர்ச் போர்டு பார் வேர்ல்ட் மிஷனரிஸ்' (யு.சி.பி.டபிள்யூ.எம்.,) 31.1 ஏக்கர் நிலத்தை சி.எஸ்.ஐ.டி.ஏ.,விற்கு மாற்றியது. அதில் சில சொத்துக்களை விற்க மதுரை- ராமநாதபுரம் திருமண்டில (சி.எஸ்.ஐ.,) நிர்வாகம் 2006 ல் தீர்மானித்தது.

2008 ல் ஐ.ஐ.எப்.எல்.,பெசிலிட்டீஸ் சர்வீஸ் நிறுவனம் 6.74 ஏக்கர் நிலத்தை வாங்கியது. அந்நிறுவனம் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை அரசின் அனுமதியுடன் அமைத்தது. அதில் 150 க்கும் மேற்பட்டோர் வீடுகளை வாங்கி வசிக்கின்றனர்.

இந்நிலையில் ஒப்படைவு நிபந்தனை மீறப்பட்டதாகவும், ஏ.பி.சி.எப்.எம்.,வசம் நிலத்தை ஒப்படைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தேவசகாயம் என்பவர் தமிழக நில நிர்வாக கமிஷனரிடம் புகார் செய்தார். அரசு நிலத்தை விதிகளை மீறி மூன்றாம் தரப்பிற்கு சி.எஸ்.ஐ.,நிர்வாகம் மாற்றியதாகவும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் 2022 ல் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நில நிர்வாக கமிஷனர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணைக்கு பின் அவர் நில ஒப்படைவு உத்தரவை 2024 ல் ரத்து செய்தார். இதை எதிர்த்து ஐ.ஐ.எப்.எல்.,பெசிலிட்டீஸ் சர்வீஸ் நிறுவனம், ஷிரயன்ஸ் பவுண்டேஷன், சி.எஸ்.ஐ.,மதுரை-ராமநாதபுரம் திருமண்டலம் சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார்.

மனுதாரர்கள் தரப்பு: ஏ.பி.சி.எப்.எம்., முழு சந்தை மதிப்பு தொகை, நில வரியை செலுத்தியுள்ளது. நிலத்தை மீண்டும் கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. விற்பனை மூலம் கிடைத்த வருவாய் தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் எதுவும் இல்லை. தேவசகாயம் தனக்கு வேலை வழங்காததற்காக சர்ச் நிர்வாகம் மீது கொண்ட தனிப்பட்ட வெறுப்புணர்வு காரணமாக உள்நோக்கில், 10 ஆண்டுகளுக்கு பின் தாமதமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ஆவணங்களை பரிசீலிக்காமல் 31.1 ஏக்கர் ஒதுக்கீட்டை ரத்து செய்து நில நிர்வாக கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விற்பனை செய்யப்பட்ட இடத்தில் கட்டுமானத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரிகளால் திட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி: மனுதாரர்கள் நிவாரணம் பெற உரிமை உண்டு. 2018 ல் அரசின் மானியச் சட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் 1912ல் பிறப்பிக்கப்பட்ட நிலம் ஒப்படைவு நிபந்தனைகள் செல்லாததாகி விடுகிறது. 2018 க்கு முன்பு கூட, விதிமீறல்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மாறாக பட்டா, 'லே அவுட்' (கட்டட திட்டம் ஒப்புதல்) வழங்குதல், வருவாய்த்துறை ஆவணங்களை மாற்றியமைத்துவிட்டு, நிலம் ஒப்படைவை ரத்து செய்து மீண்டும் கையகப்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

நில நிர்வாக கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement