பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு, அதன் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது: இந்தியா எச்சரிக்கை

3

புதுடில்லி : ''பயங்கரவாதிகளை தொழில்முறையில் வளர்த்த நாடு, அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என நினைப்பது தன்னைத்தானே முட்டாள் ஆக்கி கொள்வதற்கு சமம் ஆகும், '' என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.


டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

காஷ்மீர் குறித்து எந்த பிரச்னையாக இருந்தாலும் இந்தியாவும், பாகிஸ்தான் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விடுவிப்பது தான் நிலுவையில் உள்ள பிரச்னை.

10ம் தேதி காலை முக்கிய இடங்களில் வலிமையான தாக்குதலை நடத்தியிருந்தோம். 3:35 மணிக்கு டிஜிஎம்.,வை பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் வேண்டி பேசினார்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையில் நல்லெண்ணம் அடிப்படையில் அந்த ஒப்பந்தம் உருவானது. அது இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு சரியான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கும்.

மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் துவங்கியது முதல் முதல் 10ம் தேதி போர் நிறுத்தம் ஏற்படும் வரை, இந்தியா அமெரிக்கா இடையே ராணுவ சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவாதத்தில் வர்த்தகம் ஏதும் வரவில்லை.

பயங்கரவாதிகளை தொழில்முறையில் வளர்த்த நாடு, அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என நினைப்பது தன்னைத்தானே முட்டாள் ஆக்கி கொள்வதாகும்.
இந்தியா அழித்த பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்பு தளங்கள் இந்தியர்களின்மரணத்திற்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுதும் உள்ள பல அப்பாவிகளின் மரணத்திற்கும் காரணமாக இருந்தவையாகும்.

பஹல்காமில் தாக்குதலை நடத்தியது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டிஆர்எப் அமைப்பு. பல முறை இதனை விளக்கி உள்ளோம். டிஆர்எப் அமைப்பு பற்றி ஐ.நா., அமைப்பிடம் தெரிவித்துள்ளோம். அது எந்த மாதிரியான தகவல் என்பதை இப்போது கூற முடியாது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், டிஆர்எப் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்கக்கூடாது என விவாதிக்கும். இந்தியா அளித்த தகவலின் பேரில் ஐ.நா., நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். எங்களின் நோக்கம் பயங்கரவாதிகள் மட்டும் தான். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துவோம். இந்தியாவின் நிலைப்பாடு ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் நிலைப்பாடு 10ம் தேதி விமான தளங்களை தாக்கிய பிறகு மாறி இருக்கிறது.

இந்தியாவின் தாக்குதலினால் சேதமடைந்த இடங்கள் குறித்த புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் கிடைக்கிறது. இதன் மூலம் பாதிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
நாம் அழித்த படத்தை வைத்து, பாகிஸ்தானின் வெற்றி என அந்நாட்டு அமைச்சர் கோஷமிட்டார். கார்கில் போரின் போதும் வெற்றி பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், நடந்தது அனைவருக்கும் தெரியும்.


ஆபரேஷன் சிந்தூர் காரணமாக, பஹவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் சில இடங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. முக்கிய விமான தளங்கள் செயலிழந்தன.
இதனை சாதனை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நினைத்தால், அதனை கொண்டாடலாம். நமது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தோம்.


பாகிஸ்தான் ராணுவம் அமைதியாக இருந்தால் பிரச்னை இருக்காது. அவர்கள் தாக்குதல் நடத்தினால் நாம் நடத்துவோம். 9ம் தேதி இரவு வரை இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்கியது. அவர்களின் முயற்சி தோல்வி அடைந்த உடன் 10ம் தேதி அவர்களின் குரல் மாறியது. பாக்., ராணுவ டிஜிஎம்ஓ நம்மை தொடர்பு கொண்டார். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Advertisement