பும்ராவுக்கு டெஸ்ட் கேப்டன் வாய்ப்பு * கவாஸ்கர் ஆதரவு

புதுடில்லி: ''இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பும்ராவை நியமிக்கலாம்,''என கவாஸ்கர் தெரிவித்தார்.
டெஸ்ட் அரங்கில் இருந்து அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, கோலி ஓய்வு பெற்றனர். அடுத்து நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு (ஜூன் 20-ஆக.4), புதிய இந்திய கேப்டனை அறிவிக்க உள்ளனர். சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில், முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற 'வேகப்புயல்' பும்ரா வெற்றி தேடித் தந்தார். அடிக்கடி காயம் அடைவது இவரது பலவீனம். இதனால், புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் சுப்மன் கில், துணை கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்படலாம்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக பும்ராவை நியமிப்பதே சிறந்தது. வேறு ஒருவரை கேப்டனாக நியமித்தால், அவரும் பும்ரா உதவியை தான் நாடுவார். 'நம்பர்-1' பவுலரான இவர், எந்த நேரத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறன் பெற்றவர். இதனால், கூடுதலாக ஒரு ஓவர் கொடுக்க விரும்புவர். மாறாக பும்ராவே கேப்டனாக இருந்தால், தான் எப்போது பந்துவீச வேண்டும், எப்போது 'ரெஸ்ட்' எடுக்க வேண்டும் என்பதை எளிதில் முடிவு செய்யலாம்.
பாதிப்பு இல்லை
பும்ராவுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும் என்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் 8 நாள் 'பிரேக்' உள்ளது. இதனால், பும்ராவுக்கு பிரச்னை ஏற்படாது.
ரோகித், கோலி எப்படி
தேர்வாளர்களுடன் கலந்து ஆலோசித்து தான் ரோகித், கோலி ஓய்வை அறிவித்திருப்பர். இருவரும் சிறந்த வீரர்கள். நேர்மையாக சொன்னால், 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இவர்கள் விளையாட வாய்ப்பு இல்லை. ஒருவேளை அடுத்த ஆண்டு இருவரும் சதங்களாக விளாசினால், கடவுள் கூட நீக்க முடியாது. இவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என தேர்வுக்குழுவினர் நம்பினால், வாய்ப்பு கொடுப்பர்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

கிர்மானி விருப்பம்
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி கூறுகையில்,''டெஸ்ட் அரங்கில் இன்னும் சில காலம் கோலி விளையாடியிருக்கலாம். இளம் தலைமுறை வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார்,''என்றார்.

கும்ளே வியப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,''இங்கிலாந்து தொடருக்கு முன், டெஸ்ட் அரங்கில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றது வியப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் அஷ்வின் ஓய்வு பெற்றார். இவர்கள் மூவரும் மைதானத்தில் இருந்து, ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான முறையில் விடைபெற்றிருக்க வேண்டும்,''என்றார்.

பிருந்தாவனத்தில் கோலி
டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, மனைவி அனுஷ்காவுடன் நேற்று பிருந்தாவனம் (உ.பி.,) வந்தார். இங்கு ஆன்மிக தலைவர் பிரேமானந்த் கோவிந்த் ஷரன் ஜி மகாராஜை சந்தித்து ஆசி பெற்றனர். கடவுள் பெயரை உச்சரிப்பதன் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கும் என பிரேமானந்த் கூறியதை ஆர்வத்துடன் கேட்டனர். இந்த ஆசிரமத்திற்கு 3வது முறையாக வந்தார் கோலி. ஏற்கனவே 2023, ஜன.4, 2025, ஜன.10ல் வந்திருந்தார்.

ஆடல், பாடல் 'நோ'
கவாஸ்கர் கூறுகையில்,''போர் காரணமாக சில குடும்பங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, பிரிமியர் தொடரின் எஞ்சிய போட்டிகளின் போது மைதானத்தில் பாடல் ஒலிப்பது, நடன மங்கைகளின் ஆட்டம் போன்றவை வேண்டாம். ரசிகர்கள் வரட்டும். கிரிக்கெட் போட்டி மட்டும் நடக்கட்டும்,''என்றார்.

எந்த இடத்தில் ராகுல்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''டெஸ்டில் ஆக்ரோஷமாக விளையாடியவர் கோலி. இவருக்கு கேப்டன் பதவி அளித்திருக்க வேண்டும். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடியிருப்பார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அணியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியில் சுப்மன் கில்லுக்கு நிரந்தர இடம் கிடைப்பதே சந்தேகம். கேப்டன் பொறுப்பை பும்ராவுக்கு வழங்கலாம். இவர் உடற்தகுதி பெறாத போட்டிகளில் மட்டும் கே.எல்.ராகுல் அல்லது ரிஷாப் பன்ட் வழிநடத்தலாம். பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் ராகுல் களமிறங்கலாம்,''என்றார்.

Advertisement