தவறு செய்வோருக்கு அச்சம் ஏற்படுத்தும் தீர்ப்பு! பொள்ளாச்சி மக்கள் கருத்து

பொள்ளாச்சி,; 'தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு இருக்கும்,' என, பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஒன்பது பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது குறித்து மக்கள் கருத்து தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் கடந்த, 2019ம் ஆண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரை கைது செய்து, சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு, கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில், ஒன்பது பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, சாகும் வரை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு குறித்து பொதுமக்கள் கருத்து வருமாறு:
மணிமாலா, வக்கீல்: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து கடந்த, ஆறு ஆண்டுகளாக விசாரணை நடக்கிறது. தற்போது, வழக்கில் தொடர்புடைய ஒன்பது பேருக்கும், சாகும் வரை ஆயுள் தண்டனையை கோர்ட் வழங்கியுள்ளது பெண்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. எந்த பிரச்னை வந்தாலும் கோர்ட்டுக்கு சென்றால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
வளர்மதி: பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்தததால், பெண் குழந்தைகளை தனியாக அனுப்ப தயக்கமாக இருந்தது. பலர், பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் நிலை ஏற்பட்டது. பெண்களின் சுதந்திரம் பறிபோனது. ஆறு ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தீர்ப்பு மன மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது மனரீதியாக சந்தோஷம் கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். தவறு செய்யும் முன், சிந்திக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கவிதா: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் வரவேற்கதக்கது. பொள்ளாச்சியில் நடந்த சம்பவம், மாநில அளவில் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, நீதிமன்றம், குற்றம் செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை தொட நினைப்பவர்களுக்கு இதுபோன்ற தீர்ப்புகள் அச்சத்தை ஏற்படுத்தும்.
விஜயலட்சுமி: பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பை மனதராக வரவேற்கிறோம். இது தவறு செய்பவர்களுக்கு தண்டனை உறுதி என்பதை காட்டுகிறது. தீர்ப்பை வரவேற்பதுடன், பெண்களிடம் மனதைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு நடந்தால், தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
தீபா: பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்ட தண்டனை வரவேற்கும் வகையில் உள்ளது. இது தவறு செய்வோருக்கு ஒரு பாடமாக அமையும். பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவத்துக்கு நல்ல தீர்ப்பை கோர்ட் வழங்கியுள்ளது வரவேற்கிறேன். பள்ளி, கல்லுாரிகளில், பெண் குழந்தைகளிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தவறு நடந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்கும் மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகுமாரி: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது. எங்கு போனாலும் பொள்ளாச்சியா, பாலியல் சம்பவமா என கேட்டதால் தர்மசங்கடமாக இருந்தது. தற்போது, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை எனக்கூறிய தீர்ப்பு வரவேற்கதக்கது. இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
சண்முகப்பிரியா, கவுன்சிலர்: பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு எதிராக, சட்டத்தின் முன் உறுதியோடு போராடினால் கொடியவர்களுக்கான தண்டனையை சட்டம் வழங்கும் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான ஒரு முன்னுதாரணமாகட்டும். இந்த கொடியவர்களால் பாதிக்கப்பட்டு இறுதிவரை உறுதியாக போராடிய அனைத்து வீரமங்கைகளுக்கும் வாழ்த்துக்கள்.
பாபு: பாலியல் வழக்கு சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது வரவேற்கதக்கது. தவறு செய்வோருக்கு தண்டனை கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. மேலும், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
சக்திவேல்: பொள்ளாச்சி பாலியல் வழக்கால் பலருக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டது. தற்போது இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது மனநிம்மதியை ஏற்படுத்துகிறது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பதற்கு பதிலாக, மரண தண்டனை விதித்து இருக்கலாம். இனி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட அச்சம் ஏற்பட வேண்டும். யாருக்கும் தவறு செய்யும் தைரியம் வராது. இத்தீர்ப்பால், பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.
நடராஜ்: பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது. நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு உள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு பயம் ஏற்படும். இனி குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம். எந்த பிரச்னையாக இருந்தாலும், பெண்கள் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும், சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை வரவேற்கும் வகையில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.தி.மு.க., சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சியாமளா, மாவட்ட இளைஞணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.