2,000 பள்ளி வாகனங்களுக்கு அரசு தகுதிச் சான்று மறுப்பு
சென்னை:பாதுகாப்பு குறைபாடு உள்ள, 2,000 பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு, எப்.சி., என்ற தகுதிச்சான்று வழங்க, போக்குவரத்து ஆணையரகம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில், 34,900க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும். அதன்படி, கடந்த இரண்டு வாரங்களாக, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், போக்குவரத்து, கல்வி, காவல் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரகஅதிகாரிகள் கூறியதாவது:
இதுவரை, 50 சதவீத வாகனங்களில், 16 அம்ச பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவசர கால கதவு, ஜன்னல், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், 2,000 வாகனங்களில் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. செயல்படாத அவசர கால கதவுகள், 'சிசிடிவி கேமரா' மற்றும் தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டிகள் இல்லாதது போன்ற குறைபாடுகளை கண்டறிந்து, சரி செய்ய உத்தரவிட்டுஉள்ளோம்.
இந்த வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும், வாகன தகுதிச் சான்று மறுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பதற்கு முன், இதை சரி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மேலும், எஞ்சியுள்ள பள்ளி வாகனங்களிலும் ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.