மானிய விலை பொருட்களுக்கு 'கமிஷன்' தனியார் நிறுவனங்கள் கெடுபிடி

விவசாயிகள் நலன் கருதி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்பில் பல்வேறு இயந்திரங்கள், விதைகள் போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர், பவர் வீலர் போன்ற பொருட்கள் மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள வட்டாரங்களில் வழங்கப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் பொருட்கள் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட இந்த பொருட்களுக்கு, விவசாயிகள் மானியத்தொகை போக மீதமுள்ள பணத்தை கட்டிவிட்டு பொருட்களை பெற்றனர்.

அதன் பின் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர், அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கமிஷனாக கேட்டு கறாராக வாங்கியுள்ளனர். சிலர் தருவதற்கு மறுத்த நிலையில், நீங்க பணம் கொடுக்கலைன்னா அதிகாரிகள் எங்களுக்கு அடுத்த ஆர்டர் தரமாட்டாங்க என புலம்பியுள்ளனர்.

மேலும் சில ஊழியர்கள், பொருட்களை கொடுப்பதற்கு முன்பே விவசாயிகளிடம் கமிஷனை வாங்கிக்கொண்டு பொருட்களை தராமல் அலைக்கழித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement