மாமியார் கணக்கில் பணம் மோசடி வார்டன் 'சஸ்பெண்ட்'

சேலம்:சேலம் மத்திய சிறையில், பேக்கரி பொருட்கள் விற்பனை பணத்தை முறைகேடாக பெற்ற சிறை வார்டன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம் மத்திய சிறையில், 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தயாரிக்கும் பிஸ்கட், பிரட், உள்ளிட்டவை பேக்கரி வாயிலாக கைதிகள், மக்களுக்கு விற்கப்படுகின்றன. சிறை வார்டன் சுப்ரமணியம், 35, பேக்கரி விற்பனை பணத்தை முறையாக கணக்கு காட்டாமல், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, 'ஜிபே' எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலி வாயிலாக அனுப்ப அறிவுறுத்தி, ஓராண்டாக முறைகேடாக பெற்றுள்ளார்.

இந்த விபரம் சிறை அதிகாரிகளுக்கு தெரியவரவே, அவரிடம் விசாரித்தனர். அதில், அவர் பணம் பெற்ற குறிப்பிட்ட ஜிபே எண், சுப்ரமணியத்தின் மாமியார் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

மேலும், 1.80 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சுப்ரமணியத்தை, 'சஸ்பெண்ட்' செய்து, சிறைத்துறை எஸ்.பி., வினோத் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement