கம்பம் பள்ளத்தாக்கில் பசுந்தாள் உர விதை வழங்கப்படுமா

கம்பம் : நெல் சாகுபடி செய்யும் வயல்களில் பசுந்தாள் உரத்திற்கான சணப்பு விதைகள் வழங்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடி 14,707 ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது.

ரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் பயன்படுத்தி வருவதால், மண் வளம் பாதித்துள்ளது.

நெல் சாகுபடி நிலங்களில் தக்கப் பூண்டு, சணப்பு, கொளுஞ்சி விதைப்பு செய்து 50 நாட்களுக்கு பின் வளர்ந்த பயிரை அப்படியே மடக்கி உழவு செய்தால், மண்ணிற்கு பசுந்தாள் உரம் கிடைக்கும்.

கம்பம் பள்ளத்தாக்கில் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் விதைப்பு செய்து, ஜூன் நடவிற்கு முன் மடக்கி உழவு செய்வார்கள்.

இதனால் மண்ணிற்கு பசுந்தாள் உரம் கிடைக்கும். கடந்த 15 ஆண்டுகளாக வேளாண் துறை தக்கைப் பூண்டு தருவதில்லை. கடந்தாண்டு சணப்பு மட்டும் வழங்கினார்கள். ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்திற்கு 100 டன் அனுமதித்தார்கள். ஒரு கிலோ ரூ.100, இதில் 50 சதவீத மானியம் போக ரூ.50 செலுத்தி, 20 கிலோ விதைக்கு ரூ.ஆயிரம் கட்டணமாக வழங்கினர்.

ஆனால் இந்தாண்டு இதுவரை அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

மண்ணின் வளம் காக்க, பசுந்தாள் உர விதைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement