கொளுத்தும் வெயிலில் மறியல் செய்த மக்கள்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொக்குடையான்பட்டியில் வெளியேறும் கழிவுநீர் அடைப்புகளால் ரோட்டில் தேங்குகிறது. சாக்கடை கழிவு நீரை ரோட்டில் வரவிடாமல் தடுப்பதால் ஊருக்குள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது.

இது குறித்து 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து ஒன்றிய பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் வந்து தற்காலிகமாக சீர்படுத்தினர். கழிவு நீர் செல்லும் வழியில் அடைப்புகளையும், துார்ந்து போன பகுதிகளையும் விரைவில் சரிசெய்வோம் என தெரிவித்தனர்.

இரண்டு மாதங்கள் ஆகியும் சரிசெய்யாததால் கழிவுநீர் ரோட்டில் தேங்கி பெரும் மேடுபள்ளம் பல ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர் விழுந்து எழுகின்றனர். லோடு வாகனங்கள் பள்ளத்திற்குள் இறங்கி வெளியேற முடியாமலும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் 1:45 மணியளவில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொக்குடையான்பட்டி கிராமத்தினர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார், முன்னாள் சீமானுாத்து ஊராட்சித் தலைவர் அஜித்பாண்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மறியலால் வத்தலக்குண்டு ரோட்டில் மதியம் 1:45 முதல் 2:15 வரை போக்குவரத்து பாதித்தது.

Advertisement