பிளஸ் 2வில் தேர்வுத்துறை சொதப்பல்; கவனக்குறைவுக்கு உண்டா 'கவனிப்பு'

3


மதுரை : இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியீடு, மாணவர் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் போன்றவற்றில் தேர்வுத்துறை சொதப்பியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலாவது இத்துறை கவனத்துடன் செயல்பட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


மே 8ல் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பாடம் வாரியாக 'சென்டம்' மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் வெளியிடும் போது ஆங்கிலம் குறித்த தகவல் இடம் பெறவில்லை. இதனால் அந்த பாடத்தில் யாரும் 'சென்டம்' பெறவில்லை என கருதப்பட்டது. ஆனால் அந்த பாடத்தில் 68 மாணவர்கள் 'சென்டம்' பெற்றிருந்தது சில மணிநேரத்திற்கு பின் அறிவிக்கப்பட்டது. அதுவரை மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் இருந்தனர்.


நேற்றுமுன்தினம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்தது. ஆனாால் மதியம் வரை பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்களில் இணை இயக்குநர் பெயர் செல்வக்குமார் என இருந்தது. அவர் 5 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்று, தற்போது அந்த பொறுப்பில் ராமசாமி உள்ளார்.


இத்தகவலை தலைமையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய பின் தான் தேர்வுத்துறை சுதாரித்தது. மதியத்திற்கு மேல் திருத்தம் செய்த சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. தேர்வுத்துறை கணினிப் பிரிவின் இந்த இரண்டு தவறுகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறு செய்தவர்கள் மீது தேர்வுத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு விளக்கம் கூட கேட்கவில்லை என புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியது: பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிப்பு என்பது பல லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்டது. அதில் அலுவலர்கள் கவனக்குறைவுடன் நடந்துள்ளனர். இதன் மூலம் அத்துறை இயக்குநர், அமைச்சர் மீது தான் விமர்சனம் எழும். பத்தாம் வகுப்பிலாவது தேர்வுத்துறை இதுபோன்ற சொதப்பல்களை தவிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Advertisement