பள்ளிகளில் 'சுற்றுலா கிளப்' உருவாக்கப்படுமா?

திருப்பூர் ; 'பள்ளி, கல்லுாரிகள் தோறும் 'சுற்றுலா கிளப்' உருவாக்கும் திட்டம், நடப்பு கல்வியாண்டிலாவது ஊக்குவிக்கப்பட வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த, 3 ஆண்டுக்கு முன் நாட்டின், 75வது சுதந்திர தின அமுது பெருவிழாவையொட்டி, நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், சுற்றுலா உள்ளிட்ட விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில், 'யுவா டூரிஸம்' என்ற பெயரில், 'சுற்றுலா கிளப்' அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

அதன்படி பள்ளி, கல்லுாரிகளில் செயல்படும் என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., போன்று 'சுற்றுலா கிளப்' செயல்பட வேண்டும்.

பள்ளிகளில், 7ம் வகுப்புக்கு மேல், இந்த கிளப்களை உருவாக்கலாம்; கிளப்களில் இணைந்துள்ள மாணவ, மாணவியரை, சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சுற்றுலா முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பது; மாணவர்கள் பெற்ற அனுபவங்களை பிறருக்கு தெரிவிக்க செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சுற்றுலா கிளப் சார்பில் கட்டுரை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளை நடத்தி, விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.

இதன் வாயிலாக, சுற்றுலாவின் முக்கியத்துவம், சுற்றுலா தலங்களின் வரலாறு, அவற்றை பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மாணவர்கள் பெறுவர் என, எதிர்பார்க்கப்பட்டது.

இதன் வாயிலாக நம் கலாசாரம், பண்பாட்டை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இத்திட்டத்தை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு, அந்தந்த மாநில சுற்றுலா துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், பள்ளி நிர்வாகத்தினர், 'சுற்றுலா கிளப்' உருவாக்க ஆர்வம் காட்டவில்லை; இதனால், திட்டம் தொய்வடைந்தது.'வெறும் ஏட்டுக்கல்வியும், அதன் வாயிலாக பெறப்படும் மதிப்பெண் மட்டும், மாணவர்களின் அறிவாற்றலை வளர்த்து விடாது.

மாறாக, சுற்றுலா, சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்; வரும் கல்வியாண்டிலாவது, இத்திட்டத்தை செயல்படுத்த பள்ளிகள் முன்வர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு, சுற்றுலாத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement