கண்களை பாதுகாக்கும் 'இமைகள்'

பல்லடம் : பள்ளி விடுமுறையை தொடர்ந்து, மாணவர்களின் கண்களை பாதுகாக்கும் நோக்கில், பல்லடம் இமைகள் அறக்கட்டளை காவடி ஆட்ட பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறது.
பல்லடம் தாலுகா அனைத்து காவடி குழு, இமைகள் கண் தான அறக்கட்டளை மற்றும் இமைகள் ரோட்டரி சங்கம் சார்பில், காவடி ஆட்ட பயிற்சி முகாம், பல்லடம் மாகாளியம்மன் பெரிய விநாயகர் கோவிலில் துவங்கி நடந்து வருகிறது.
இது குறித்து இமைகள் அறக்கட்டளை தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:
கோடை கால பள்ளி விடுமுறை நாட்களில், மாணவ, மாணவியர் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக, மொபைல் போன், டிவி உள்ளிட்டவற்றில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதால், கண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதுடன், உடல் ரீதியான செயல்பாடுகளும் குறைகின்றன. இதனால், கண்கள் பாதிக்கப்பட்டு கண் கண்ணாடிகள் அணியும் சூழல் ஏற்படுவதுடன், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கிலும், பாரம்பரியமான காவடி ஆட்டத்தை இன்றைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், கோடை விடுமுறையில் காவடி ஆட்ட பயிற்சி இலவசமாக துவங்கியுள்ளோம். தினசரி, மாலை நேரங்களில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில், 2 வயது முதல் வயதானவர்கள் வரை ஆர்வத்துடன் காவடி ஆட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள், 7 பேர், பெண்கள், 30 பேர் உட்பட மொத்தம், 83 பேர் காவடி ஆட்ட பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் காவடியாட்ட பயிற்சி வழங்குகியபோதும், நாங்கள் பாரம்பரிய முறைப்படி மட்டுமே கற்றுத் தருகிறோம். இது, முருகனுக்காக ஆடும் ஆட்டம் என்பதால், இதை முறைப்படி தான் கற்றுக்கொள்ள வேண்டும். மொத்தம், 25 நாட்கள் பயிற்சி முடிந்து, எதிர்வரும் கிருத்திகை தினத்தன்று மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் அரங்கேற்றம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'