துர்நாற்றம் வீசியதால் அவலம்; குப்பை வண்டி தடுத்து நிறுத்தம்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக் குழியில் கொட்டி வருகின்றனர்.

குப்பை கொட்டும் போது, அப்பகுதி பொதுமக்கள் சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார கேடு உள்பட எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில், உரிய பராமரிப்புடன் குப்பை கொட்டப்படும் என உறுதி கூறி குப்பை கொட்டி வந்தனர்.

இந்நிலையில், மருந்து தெளித்தல் உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்களால் குடியிருக்க முடியவில்லை, எனக்கூறி மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் காளியப்பன், தமிழக விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் குப்பை கொட்ட வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.

இதனால், குப்பை கொட்ட வந்த லாரிகள் திரும்பி சென்றன. சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'துர்நாற்றம் வீசாத வகையில் மருந்து தெளித்து, மண் போட்டு உரிய பராமரிப்பு மேற்கொள்ளப்படும். பராமரிப்பு மேற்கொண்ட பின் குப்பை கொட்டப்படும். அதுவரை குப்பை கொட்டப்படாது,' என உறுதி கூறினர்.

இதனால், கட்சியினர் மற்றும் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement