4 விவசாயிகளுடன் நடந்த குறைதீர்க்கும் கூட்டம்

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் முறையாக தெரிவிக்கப்படாததால் 4 விவசாயிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி. ஓ., கனகராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்



ராம்பாண்டியன், விவசாய சங்க மாவட்ட தலைவர்: காரியாபட்டி குண்டாற்றில் மழைக்காலங்களில் பெய்யும் அதிக மழைநீர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வீணாக கடலில் கலக்கிறது. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக காரியாபட்டி -புதுப்பட்டி அருகே ஒரு தடுப்பணையும், பள்ளி மடம் அருகில் ஒரு தடுப்பணையும் கேட்டு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதை கட்டினால் 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறும். 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் பிரச்னை தீரும். அரசு உடனடியாக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், பரளச்சி: மீனாட்சிபுரம் கிராமத்தில் மின் வயர் தாழ்வாக சென்றதில் விவசாயி மீது உரசி உயிரிழந்தார். இன்று வரை அது சரி செய்யப்படவில்லை. இனிவரும் காலங்களில் விவசாயிகள் கூட்டம் நடப்பது பற்றி தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும். ஊடகங்கள், பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

கூட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்கள், ஒன்றிய அதிகாரிகள் பொதுப்பணி, வனத்துறை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement